வேலுார்:இழப்பீடு வழங்காததால், பொன்னை அருகே, 5 ஏக்கர் நெற்பயிருக்கு விவசாயிகள் தீ வைத்தனர்.
வேலுார் மாவட்டம், பொன்னை அருகே கொண்டா ரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 45. இவர் தன், 5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு, வேளாண் துறை வாயிலாக பயிர் காப்பீடு செய்து, 4,000 ரூபாய் கட்டணமும் செலுத்தியிருந்தார்.
கடந்த மாதம் பெய்த மழையால், இவரது நிலத்தில் விளைந்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. வேளாண் துறை அதிகாரிகள், காப்பீட்டுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, இழப்பீடு வழங்கும்படி கடிதம் அனுப்பினார்.
இழப்பீடு வழங்காததால், விரக்தியடைந்த சிவக்குமார் மற்றும் அவரிடம் பணியாற்றும் விவசாயிகள், நேற்று காலை, 5 ஏக்கர் நெற்பயிருக்கும் தீ வைத்தனர்.
பொன்னை போலீசார், தீயணைப்பு துறையினருடன் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும், அரை ஏக்கர் நெற்பயிர் நாசமானது.
வேளாண் துறை அதிகாரிகள் வாயிலாக, பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி, இழப்பீடு வாங்கித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறி, விவசாயிகளை போலீசார் சமாதானப்படுத்தினர்.