ஓமலுார்:லாரியில் ரகசிய அறை அமைத்து, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான, 'ஹான்ஸ்' பாக்கெட்டுகளை கடத்தி வந்த டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சேலம் வழியே மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன.
நேற்று காலை, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவுப்படி, தீவட்டிப்பட்டி போலீசார், பண்ணப்பட்டி அருகே தின்னப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த லாரியை நிறுத்தி விசாரித்தபோது, பெங்களூருவில் இருந்து மதுரைக்கு செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.
சரக்கு ஏதும் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார், பின்புற கதவை திறந்தபோது, லாரி அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு, அதில், போதை தரும் புகையிலை பாக்கெட்டுகள் மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர், தொப்பூரைச் சேர்ந்த ராஜா, 22, என தெரிந்தது. மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், வயல்வெளி பகுதியில் தப்பி ஓடியபோது, போலீசார் விரட்டிச்சென்று, மக்கள் உதவியுடன் பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
லாரி மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.