திருச்சி:மணப்பாறை அருகே சிறுமியர் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக ராஜா என்பவர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா 44. பத்து ஆண்டுகளுக்கு முன் லண்டனில் வேலை பார்த்த இவர் பின் சொந்த ஊருக்கு திரும்பினார்.
டில்லியில் இருந்து சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு சர்வதேச செயல்பாடுகள் பிரிவு அதிகாரிகள் ஆறு பேர் பூமாலைப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ராஜா சிறுமியர் ஆபாச படங்கள் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கிடைத்த தகவலின் படி சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பத்து மணி நேரத்துக்கும் மேலாக வீட்டில் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜாவிடமும் விசாரணை நடத்தி சென்றனர்.