கிருஷ்ணகிரி:கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை மடக்கிய தாசில்தாருக்கு முகமூடி அணிந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் ஆர்.ஐ. முருகேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணிக்கு கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி திருப்பத்துாரில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருவண்ணாமலை சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் நிறுத்தினர்.
விசாரணையில் லாரி டிரைவர் திருப்பத்துார் மாவட்டம் வெலகல்நத்தம் ஜி.எஸ்.வட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் 34 என்பது தெரிந்தது.
அதிகாலை 2:30 மணிக்கு அங்கு வந்த முகமூடி அணிந்த நபர்கள் சிலர் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தாசில்தார் இளங்கோ தனிப்படை போலீசாருக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை.
பின் எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் அளித்தார். அதன் பிறகு அங்கு வந்த போலீசாரை பார்த்தவுடன் முகமூடி கும்பல் தப்பியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று பாணாவரம் ரயில்வே ஸ்டேஷனில் ரோந்து சென்றனர்.அப்போது பிளாட்பார இருக்கையில் மறைத்து வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு ரயிலில் கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.