நாமக்கல்,-நாமக்கல் அருகே துவங்கிய சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மண்டல கபடி போட்டியில், மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் மாணவியர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மண்டல கபடி போட்டி, நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் உள்ள, 'தி நவோதயா அகாடமி' பள்ளியில் நேற்று துவங்கியது.
தமிழகம், புதுச்சேரி, அந்தமானில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின், 129 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. மூன்று நாள் நடக்கும் போட்டியில், ஆண்கள் பிரிவில், 103 அணிகளும், பெண்கள் பிரிவில், 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
கபடி போட்டியை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், நாமக்கல், கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் மற்றும் கே.எஸ்.எஸ்.சி., செயலர் சுப்புலட்சுமி வள்ளிநாயகம் துவக்கி வைத்தனர். முதல் நாள் ஆட்டத்தில், பெண்கள் பிரிவில், மதுரை, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ.,பள்ளி அணி அபாரமாக ஆடி, துாத்துக்குடியைச் சேர்ந்த ஆச்சாரியா பள்ளி அணியை, 47-23 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.