விழுப்புரம் : 'வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு காவிரி நீர் பெறுகின்ற வகையில் 6,500 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என்று அமைச்சர் நேரு கூறினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஒப்பந்ததாரர் காரணமாக முழுமையாக முடிக்கப்படாதால், ஒப்பந்ததாரருக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது.
தற்போது 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பாதாள சாக்கடைப் பணி முடிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விழுப்புரம் நகராட்சியினை மாநகராட்சியாக உயர்த்த 7 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும். விழுப்புரம் நகராட்சியில் 5 லட்சம் என்ற அளவிலே மக்கள் தொகை உள்ளது.
முதல்வரிடம் ஆலோசனை பெற்று, மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு காவிரி நீர் பெறுகின்ற வகையில் 6,500 கோடி ரூபாய் உலக வங்கியிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், விழுப்புரம் நகராட்சியில் 6 பணிகளுக்காக 19.95 கோடி ரூபாய், திண்டிவனம் நகராட்சியில் 15 பணிகளுக்கு 30.16 கோடி ரூபாய், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 பணிகளுக்கு 23.84 கோடி ரூபாய் என என மொத்தம் 73.95 கோடி ரூபாய் நிதியுதவியும், 7 பேரூராட்சி பகுதிகளில் கூடுதல் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ள வசதியாக 80 கோடி ரூபாய் நிதியுதவியும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்ட மதிப்பீடு பெறப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.