விருத்தாசலம் : கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரை பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததாக கூறி, அவர்களுக்கு பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்., அணியில் பொறுப்பு அறிவிக்கப்பட்ட கடலுார் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பத்துக்கு மேற்பட்டோர், விருத்தாசலம் அ.தி.மு.க., அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள், மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து, தங்களின் அனுமதி இல்லாமல், ஓ.பி.எஸ்., அணியில் இணைத்துள்ளதாக கூறி, விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறுகையில்,'அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.,, அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்டத்தில் நிர்வாகிகள் சிலருக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். ஒப்புதல் இல்லாமல், பெரும்பாலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
பொதுக்குழு உறுப்பினர்களால், பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமி தலைமையில், கட்சி சிறப்பாக செயல்படுகிறது.
அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுத்த இதுபோன்ற செயலில் ஓ.பி.எஸ்., ஈடுபட்டுள்ளார். மேற்கு மாவட்டத்தில் அவரால் அறிவிக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஜெ., மீது பற்றுள்ளவர்கள்.
ஓ.பி.எஸ்., அறிவித்துள்ள பட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என, அவர்களே விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலைமை தமிழகம் முழுவதும் இருக்கிறது. என்னிடம் விளக்கம் அளித்தவர்கள் அனைவரும் அ.தி.மு.க., மீது பற்று கொண்டவர்கள்' என்றார்.
மாவட்ட பேரவை செயலர் பாலசுந்தரம், நகர செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை செயலாளர் வழக்கறிஞர் அருண், ஒன்றிய செயலர்கள் வேல்முருகன், முனுசாமி, மங்கலம்பேட்டை பேரூர் செயலர் ஜமால் முகமது, நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.