வானுார் : நாவற்குளம் பகுதியில், தமிழக முதல்வர் வருகைக்காக போடப்படும் தார் சாலை பணியை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி - தமிழகம் எல்லையில் நாவற்குளம் அமைந்துள்ளது. புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து நாவற்குளம் பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
குறிப்பாக, தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் பகுதியில் இருந்து பெரும்பாலான வாகனங்களும், புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் போன்ற பகுதிகளில் இருந்து சேதராப்பட்டு, ஆரோவில் பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் பெரும்பாலும் இந்த சாலை வழியாக செல்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது.
இந்நிலையில், நாவற்குளம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், புதுச்சேரி தி.மு.க., பிரமுகரின் இல்ல திருமண விழா, வரும், 12ல் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வர உள்ளார். இதையொட்டி, புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் துவங்கி, திருமண மண்டபம் வரை, 1.2 கி.மீ.,க்கு, 27 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையறிந்த, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 11:30 மணிக்கு திரண்டு சென்று, சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினர்.
'புதுச்சேரி எல்லை சந்திப்பு வரை தார் சாலை போட வேண்டும்' எனக் கூறினர். திருமண மண்டபம் வரை போடப்படும் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வானுார் பி.டி.ஓ.,க்கள் மணிவாசகம், முருகன், தாசில்தார் கோவர்தனன் ஆகியோர் பேச்சு நடத்தினர். அதில், 'முதல் கட்டமாக இப்பணி நடைபெறுவதாகவும், தொடர்ந்து, 22 லட்சம் ரூபாய் செலவில் நாவற்குளம் மெயின் ரோடு முழுதும் தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று, பொதுமக்கள் கலைந்தனர்.