சென்னை: மணலியில், 9.33 கோடி ரூபாய் மதிப்பில், உணவுக் கழிவு உட்பட, மட்கும் குப்பையிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலை துவங்கி, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளாகத்தில், மற்றொரு கலன் அமைப்பதற்கான ஆலை விரிவாக்கப் பணியும் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவில், 15 மண்டலங்களை உள்ளடக்கியது. தினமும், 52 லட்சத்து 22 ஆயிரம் கிலோ திடக் கழிவுகள் கையாளப்படுகின்றன.
குப்பையை சேகரிக்க, கொடுங்கையூரில் 269 ஏக்கர் பரப்பளவிலும், பெருங்குடியில் 200 ஏக்கர் பரப்பளவிலும் குப்பை கிடங்குகள் உள்ளன. கிடங்குகளில் சேகரமாகும் குப்பையால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, மட்கும் குப்பைகளில் இருந்து உரம், உயிரி எரிவாயு தயாரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி செய்ய முடியாத, பொருட்களை எரித்து சாம்பலாக்கி, 'ஹாலோ பிளாக்' கல் தயாரிக்கப்படுகிறது.
ரூ.9.33 கோடி
அந்த வரிசையில் மணலி மண்டலம், 22வது வார்டு பல்ஜி பாளைத்தில், 'மகாசக்தி பயோ எனர்கான்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து உணவு, காய்கறி மற்றும் கால்நடைக் கழிவுகளில் இருந்து, இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9.33 கோடி ரூபாய் செலவில், பிரத்யேக இயந்திரங்களுடன் இந்த ஆலை அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
மாநகராட்சியின் 1 முதல் 8 வரையிலான மண்டலங்களில் இருந்து பெறப்படும் காய்கறி, ஹோட்டல் மற்றும் திருமண மண்டபங்களில் வீணான உணவுக் கழிவு, கால்நடைகளின் சாணக் கழிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, இந்த ஆலைக்கு கொண்டு வரப்படும்.
இதன்படி, 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடையிலான மட்கும் குப்பையை, பல செயல்முறைகள் மற்றும் படிநிலைகளுக்குப் பின், ராட்சத உலைக் கலன்களில் பதப்படுத்தி, 4,000 கிலோ இயற்கை எரிவாயு, 30 ஆயிரம் கிலோ இயற்கை உரம் உள்ளிட்டவற்றை தயாரிக்க முடியும்.
முதற்கட்டமாக 1, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் இருந்து சேகரமாகும் உணவு, காய்கறி மற்றும் கால்நடை சாணக் கழிவுகள், இந்த ஆலைக்கு கொண்டு வரப்பட்டு, இயற்கை எரிவாயுதயாரிக்கும் பணி நடக்கிறது.
செயல்பாடு
காய்கறி கழிவுகள், கத்தரிக்கும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு, பொடிப் பொடியாக நறுக்கப்படுகின்றன.
இவை, இன்னொரு இயந்திரத்தில் கூழாக்கப்பட்டு, ஒரு தொட்டிக்கு வரும். காய்கறி கூழ் துண்டுகள், உணவுக் கழிவு, சாணக் கழிவுகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, தொட்டியின் கீழ் பாகத்திற்கு அந்த கலவை திரவ நிலையில் செலுத்தப்படும்.
பின், ராட்சத மின் மோட்டார் மூலம், இன்னொரு தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நன்கு கலக்கப்பட்ட பின், குழாய் வழியாக எரிவாயு தயாரிக்கும் உலைக்கலன்களுக்குச் செல்லும்.
தலா, 5 லட்சம் கிலோ அளவு கொண்ட உலைகலன்களில், இக்கலவை சேகரித்து வைக்கப்பட்டு, 45 நாட்களுக்கு பின், கலவை மீது ஒரு அடுக்கு உருவாகி, இயற்கை எரிவாயு உற்பத்தியாகும். காற்றுப் புகாத கலனில் சேர்த்து மட்கச் செய்யும் கழிவுகளில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவில், 95 சதவீதம் மீத்தேன் உள்ளது.
பின், ராட்சத குழாய் வழியாக செல்லும் இந்த இயற்கை எரிவாயு தரம் பிரிக்கப்படும். பின், 'கம்ப்ரசர்' இயந்திரம் வழியாக சிலிண்டர்களில் இயற்கை எரிவாயு அடைக்கப்படும்.
இந்த பதப்படுத்துதலுக்குப் பின் வெளியேறும் கழிவு நீரை தேக்க ஒரு தொட்டியும், நன்னீரை தேக்க ஒரு தொட்டியும் உள்ளன. இத்துடன், இயற்கை உரம் வெளியேறும் வகையிலான இயந்திரமும், ஆலை வளாகத்தில் உள்ளது.
வாயு உற்பத்தி செய்யப்பட்ட பின், எஞ்சியுள்ள கழிவுகள் வடிகட்டப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் காற்றோட்டம் புகுத்தி, நுண்ணுயிர்களை பெருகச் செய்ய முடியும். நுண் சத்துகள் மிக்க உரங்கள், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒட்டுமொத்த ஆலை பணிகளையும் இயக்குதல் மற்றும் கண்காணித்தலுக்கென, பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆலையின் அனைத்து செயல்பாடுகளையும், ஒரே அறையில் இருந்தே கவனிக்க முடியும். இந்த வளாகத்தில், மற்றொரு கலன் அமைப்பதற்கான ஆலை விரிவாக்கப் பணியும் நடக்கிறது.