கோவை: வெளிநாட்டு சுற்றுலா மையங்களை பற்றி உயர்வான விமர்சனம் எழுதினால் பணம் கிடைக்கும் என்று நம்ப வைத்து, 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை போத்தனுார் சிட்கோவை சேர்ந்தவர் ரவிசங்கர், 39. தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு 'லிங்க்' வந்தது.
இதில், 'சுற்றுலா மையங்களை தர மதிப்பீடு செய்து இணையத்தில் நல்லபடியாக விமர்சன கருத்து பதிவு செய்ய வேண்டும். பயன் அடையக்கூடியவர்கள், பணம் அள்ளிக்கொடுப்பார்கள்; கோடி கோடியாக பணம் கொட்டும்' என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பிய ரவிசங்கர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களும், அந்த மெசேஜில் இருந்ததை உறுதி செய்தனர். அதன்படி அவரும், சுற்றுலா மையங்களை தர மதிப்பீடு செய்யத் தொடங்கினார். இந்த பணியை தருவதற்கு தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் கேட்டனர். அவர்கள் கேட்டபடி, பல்வேறு தவணைகளில் ரவிசங்கர், 33 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.
பல சுற்றுலா மையங்களுக்கு தர மதிப்பீடு விமர்சனம் எழுதியும், அவருக்கு பணம் எதுவும் வரவில்லை. விசாரித்தபோது தான், 'மோசடிப் பேர்வழிகளிடம் பணத்தை இழந்து விட்டோம்' என்பது ரவிசங்கருக்கு புரிந்தது.
அவர் உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவராஜ் பாண்டியன் வழக்கு பதிந்தார். பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட 10 வங்கி கணக்குகள் மற்றும் வெவ்வேறு யு.பி.ஐ., கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.