உடுமலை : உடுமலை அருகே, பழமை வாய்ந்த காட்டுப்பெருமாள் கோவிலை புதுப்பித்து, நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில், அப்பகுதி மக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர், ஒருங்கிணைந்து, சுற்றியுள்ள, புதர்களை அகற்றி, கோவிலை பார்வைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், கட்டடம் படுமோசமான நிலையில், இடியும் நிலையில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலின் தற்போதைய நிலை, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, உடுமலை வட்டார விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கூறியதாவது:
உடுமலை சுற்றுப்பகுதியில், பல்வேறு பழமையான கோவில்கள், பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
செல்லப்பம்பாளையம் காட்டுப்பெருமாள் கோவிலுக்கு நிலங்கள் இருப்பது, வருவாய்த்துறை ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
ஆனால், நிலம் ஆக்கிரமிப்பில், எங்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை.
ஹிந்து அறநிலையத்துறையினர் காட்டுப்பெருமாள் கோவிலுக்குரிய நிலங்களை, உடனடியாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த நடவடிக்கை வேண்டும்.
வழிபாடு இல்லாமல், நிலங்கள் உள்ள கோவில்களின் விபரங்களை கண்டறிந்து, ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சார்பில், ஹிந்துஅறநிலையத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.