அன்னுார் : கோவை மாவட்டத்தில், தொழில் பூங்காவுக்கு, 3,731 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 789 கோடியே 11 லட்சம் ரூபாய், நிர்வாக செலவாக, 114 கோடியே 42 லட்சம் ரூபாய் என, 903 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவாகும், என, கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ) இப்பணியை மேற்கொள்கிறது. நிலம் கையகப்படுத்த, ராஜன், அரசகுமார் ஆகிய இரண்டு தாசில்தார்களும், இரண்டு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, ஒரு பிரிவுக்கு 13 பேர் என, 15 பிரிவுகளில், 200 அலுவலர்கள், ஊழியர்கள் பணிபுரிய உள்ளனர். இப்பணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதன் பிறகு பணிகள் வேகப்படுத்தப்படும்' என்றனர்.