திருப்பூர்: சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பயணிகள் நேரத்தை மிச்சப்படுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, முக்கிய ரயில் வழித்தடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவ்வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது. முதல்கட்டமாக குறிப்பிட்ட சில வழித்தடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வழித்தடங்கள் 'ஏ' மற்றும் 'பி' என வகைப்படுத்தப் பட்டுள்ளது. 'ஏ' வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்திலும், 'பி' வழித்தடத்தில், 130 கி.மீ., வேகத்திலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களில், 70 கி.மீ., வேகத்தில் இயங்கும் ரயில்கள், 90 கி.மீ., வேகத்திலும், 90 கி.மீ., ஆக உள்ளவை, 110 கி.மீ., வேகத்துக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில், 160 கி.மீ., வேகத்திலும், சென்னை - ரேணிகுண்டா, 130 கி.மீ., வேகத்திலும் ரயில் இயக்க ஒப்புதல் கேட்டு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காட்பாடி - சேலம், சேலம் - கோவை இடையேயான மெயின் லைனில் ரயில்களின் வேகம் எப்போது அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை வடக்கு - மேட்டுப்பாளையம் இடையே, 90 கி.மீ., வேகத்தில் இயங்கும் ரயில்கள், 110 கி.மீ., ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் - ஜோலார்பேட்டை - போத்தனுார் வழித்தடம் குரூப் 'பி' பிரிவில் சேர்க்கப்பட்டு ரயில்கள் வேகத்தை, 130 கி.மீ., ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு சேலம் - ஈரோடு- திருப்பூர் - கோவை வழித்தடத்தில், 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் வேகம் கேட்டு கருத்துரு அனுப்ப வழித்தடம், சிக்னல், இன்ஜின் இழுவை திறன், தண்டவாள அமைப்பு, பாலம், வளைவு உள்ள இடங்கள், தாழ்வான, மேடான பகுதிகளில் வேகத்தை தாங்கும் திறனுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய வேண்டும். உள்கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்திய பின்பே, ஒரு முடிவுக்கு வர முடியும்'' என்றனர்.