கர்ப்பிணியருக்கு வளைகாப்பு
தாரமங்கலம்: சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தாரமங்கலத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நேற்று நடந்தது. சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்து, கர்ப்பிணியர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினார். ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, கர்ப்பிணியருக்கு வளையல் அணிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் உணவுகள் வழங்கினர். நகராட்சி தலைவர் குணசேகரன், வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் யசோதா, அங்கன்வாடி பணியாளர், 50க்கும்
மேற்பட்ட கர்ப்பிணியர் பங்கேற்றனர். அதேபோல் கெங்கவல்லி அருகே கூடமலையில், நேற்று, 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
பாலின பாகுபாடு விழிப்புணர்வு
தலைவாசல்: நாவக்குறிச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில், பெண்களுக்கான பாலின பாகுபாடு, பெண் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் தமிழரசி தலைமை வகித்தார். அதில் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு, வன்கொடுமை தீர்வு குறித்து பதாகைகள் ஏந்தியபடி, மகளிர் சுய உதவி குழுவினர் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர். இதில் வட்டார இயக்க மேலாளர் கயல்விழி, ஒருங்
கிணைப்பாளர் பெருமாள், மகளிர் சுய உதவி
குழுவினர், மக்கள் பங்கேற்றனர்.
தீர்த்தக்குட ஊர்வலம்
வீரபாண்டி: சித்தர்கோவில் அருகே முருங்கப்பட்டி கிராமம் கணவாய்காட்டில் அய்யனாரப்பன், சப்தகன்னிமார், கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. அங்கு இன்று காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு, சித்தர்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், குடங்களில் புனித தீர்த்தத்தை நிரப்பி, தலையில் சுமந்தபடி, தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
ஆலை உரிமையாளருக்கு எச்சரிக்கை
கெங்கவல்லி: நடுவலுார் ஊராட்சி, குறிஞ்சி நகரில் உள்ள சேகோ ஆலையில் இருந்து அதிகளவில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள், கடந்த நவம்பரில், சேலம் கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலருக்கு புகார் அனுப்பினர். நேற்று, சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, 'தேங்கி நிற்கும்படி கழிவுநீரை விடக்கூடாது. மறு ஆய்வின்போது இதேநிலை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆலை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
நாய்களுக்கு இரையான ஆடுகள்
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே அக்கரை
பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சாந்தி, 52. அவருக்கு சொந்தமான லட்சுமனுார் தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை வளர்த்தார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் இருந்த, 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. உடல் சிதறி இறந்து கிடந்த ஆடுகளை, கால்நடை மருத்துவர் ஆய்வு செய்தார். அதில் நாய்கள் கூட்டமாக வந்து கடித்து ஆடுகள் இறந்ததாக தெரியவந்தது.
சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
சேலம்: சேலம் சி.ஐ.டி.யு., மின்வாரிய ஊழியர் சங்கம் சார்பில், உடையாப்பட்டியில் உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் கிளை தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலர் ரகுபதி முன்னிலை வகித்தார். அதில் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சை உடனே நடத்துதல்; மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல்; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருடாந்திர பொதுக்குழு கூட்டம்
ஏற்காடு: ஏற்காட்டில் தமிழ்நாடு பாரத் பெட்ரோலியம் அசோசியேஷனின், 27வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். அதில் சங்க செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது. கிருஷ்ண வரதராஜன், வியாபாரத்தை பெருக்கி கொள்ள பல்வேறு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுச்செயலர் வெங்கடேசன், பொருளாளர் அருளோதயம், 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் மாவட்ட பாரத் பெட்ரோலிய டீலர்கள் செய்திருந்தனர்.
குருக்களுக்கு கொலை மிரட்டல்
'திருத்தொண்டர்' நிறுவனர் மீது வழக்கு
சேலம், டிச. 2-
சுகவனேஸ்வரர் கோவில் குருக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, திருத்தொண்டர் சபை நிறுவனர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சேலம் டவுன் ஸ்வர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் தங்க பிரசன்ன குமார், 33. இவர், சுகவனேஸ்வரர் கோவில் அம்மன் சன்னதி யில் குருக்களாக உள்ளார். கடந்த நவ., 16 இரவு, 8:40 மணிக்கு கோவிலுக்கு வந்த, திருத்தொண்டர் சபை நிறுவன தலைவரான, கன்னங்குறிச்சி, ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 46, பூஜை செய்து கொண்டிருந்த குருக்களிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார் என, தங்க பிரசன்ன குமார், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். நேற்று முன்தினம், ராதாகிருஷ்ணன் மீது ஆபாச வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரிக்கின்றனர்.
கிராம உதவியாளர் பணி
வரும் 4ல் எழுத்துத்தேர்வு
சேலம், டிச. 2-
சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட வருவாய் அலகில், 119 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கு வரும், 4ல் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. தேர்வர்கள், https://agaram.tn.gov.in/onlineforms/formpageopen.php?id=43-174 என்ற இணையதளதத்தில் பதிவு எண், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தபால் மூலம், 'ஹால் டிக்கெட்' அனுப்பி வைக்கப்படும்.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள்: 2 பெண்களிடம் நகை பறிப்பு
தலைவாசல், டிச. 2-
தலைவாசல், எழில் நகரை சேர்ந்த ரங்க
சாமி மனைவி கமலம், 70. இவர்கள், கடந்த, 29 நள்ளிரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி நுழைந்த மர்ம நபர்கள், கமலம் அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றனர். அவர் விழித்து, கொடியை பிடித்துக்கொண்டார். ஆனால், தாலி கையில் இருக்க, மீதி, 6 பவுன் சங்கிலியை அபகரித்து தப்பினர். அதேபோல் மும்முடியை சேர்ந்த செல்லம்மாள், 50, வீட்டில் புகுந்து, அவர் அணிந்திருந்த, 2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர்.
இந்த இரு சம்பவங்களின் போதும், அருகில் உள்ள வீடுகளின் முன்புற தாழ்ப்பாளை பூட்டி விட்டு, நகைகளை பறித்துள்ளனர். இதுகுறித்து தலைவாசல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.