ப.வேலுார்,டிச. 2 -
ப.வேலுார் தாலுகாவில், பரமத்தி, கபிலர்மலை என, இரு ஒன்றியங்கள், ப.வேலுார், பரமத்தி, வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனுார் என, ஐந்து டவுன் பஞ்., மற்றும் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அரசுமருத்துவமனை, டி.எஸ்.பி., மற்றும் சார்பதிவாளர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ளன. கிராமங்களை அதிகமாக கொண்டுள்ள தாலுகாவில், அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளில், நாமக்கல் அல்லது கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினர், மீட்பு பணிக்கு வர வேண்டியுள்ளது.
இரு பகுதிகளிலிருந்தும், தீயணைப்பு துறையினர் செல்ல, குறைந்தபட்சம் அரை மணிநேரமாகும். மேலும், ப.வேலுாருக்குட்பட்ட மற்ற இடங்களில், தீ விபத்து நேரிட்டால், அங்கு செல்ல கூடுதல் நேரமாகும். ப.வேலுார் வழியாக காவிரி ஆறு செல்கிறது. நீச்சல்தெரியாத நபர்கள், அவ்வப்போது, ஆழமான பகுதியில் சிக்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது. ஜேடர்பாளையம் தடுப்பணையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பொருள் சேதம், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், 'தாலுகாவில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும்' என, மக்கள் பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின், 20 வருட கோரிக்கையை ஏற்று, பரமத்தி வேலுார் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீயணைப்பு நிலம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கபிலர்மலை அருகே சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க, ப.வேலுார் எம்.எல்.ஏ. சேகர், நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி முருகன் ஆகியோர், இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.