நாமக்கல், டிச. ௨-
வட்டார அளவிலான கலைத்
திருவிழாவில், நாடகம், இசை கருவி இசைத்தல் போன்ற போட்டிகளில், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர்.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் கலைத்திருவிழா போட்டிகள், பள்ளிகள், வட்டாரம், மாவட்ட நடத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் என, மூன்று பிரிவுகளாக கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளிகள் அளவில் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் வட்டார அளவிலான கலைப்போட்டிகள் நடந்தது.
நாமக்கல், நல்லிபாளையம் வடக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடகம், கருவி இசை போட்டிகள் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு இசை கருவிகளை இசைத்து, தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். அதேபோல், பல்வேறு தலைப்புகளில், நாடகமும் அரங்கேற்றப்பட்டன.
அதில், கோவலன், கண்ணகி நாடகத்தில், கண்ணகியின் ஆவேசமும், பாண்டிய மன்னரின் நடிப்பும், தத்ரூபமாக அமைந்தது. இது, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள், டிச., 6 முதல், 10 வரையும் நடக்கிறது.
* ப.வேலுார் வட்டார அளவிலான போட்டிகள் கலைப்போட்டிகள், கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கபிலக்குறிச்சி பஞ்., தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், யூனியன் சேர்மன் ரவி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில், வெங்கரை டவுன் பஞ்., தலைவர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.