எருமப்பட்டி, டிச. 2-
பொட்டிரெட்டிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள பழமையான கட்டடங்களால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிபட்டி தொடக்கப்பள்ளிக்கு கடந்த, 1959ம் ஆண்டு, ஆறு வகுப்பறைகள் கொண்ட, மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த, மூன்று கட்டடங்களை, கடந்த, 60 ஆண்டுகளாக மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடங்களின் மேல் உள்ள ஓடுகள் சிதலமடைந்து உடைந்து விழுந்ததால், இந்த கட்டடங்கள் பூட்டப்பட்டன. தற்போது இவை மிகவும் சிதலமடைந்துள்ளதால், பள்ளி மாணவர்கள் அந்த பகுதிக்கு செல்லும் போது, விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே, அரசு இந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எருமப்பட்டி யூனியன் பி.டி.ஓ., லோக மணிகண்டன் கூறுகையில், ''மிகவும் பழமையான இந்த கட்டடங்களின் மேல் உள்ள ஓடுகளை பிரித்து எடுக்க, டெண்டர் விடப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்ததும், பணி துவக்கப்படும், கட்டடத்தின் சுவர்கள் சிறிது கூட சேதமடையாமல் உள்ளதால், அதை பராமரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறோம்,'' என்றார்.