எருமப்பட்டி, டிச. 2-
நாமக்கல் அருகே முட்டாஞ்செட்டி பஞ்., தலைவர் செக்பவரை பறித்து, நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியனில் உள்ள முட்டாஞ்செட்டி பஞ்., தலைவராக கமலபிரியாவும், துணைத்தலைவராக சபாரத்தினமும் உள்ளனர். இருவரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், பஞ்., பணிகள் முடங்கின. இதுதொடர்பாக, இரு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, பத்து நாட்களுக்கு முன், பஞ்., நிர்வாகம் முடங்கி கிடப்பதால், அடிப்படை வசதிகள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறி, கிராம மக்கள், பஞ்., அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற எருமப்பட்டி பி.டி.ஓ., மற்றும் போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
முட்டாஞ்செட்டி பஞ்., நிர்வாகம் முடங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, பஞ்., பணிகள் சீராக நடக்கவும், பொது மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், பஞ்., நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்கவும், எருமப்பட்டி பி.டி.ஓ.,வுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்ட நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், பஞ்., தலைவர் கமலபிரியாவிடம் இருந்த செக்பவரையும் பறித்து உத்தரவிட்டார்.