சேலம்:பட்டணாபட்டி கிராமத்தை சேர்ந்த, 21 வயது வீர மங்கை, நியூசிலாந்தில் நடந்த காமன்வெல்த் வலுதுாக்குதல் போட்டியில் வெள்ளி வென்று அசத்திஉள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, அ.புதுார் ஊராட்சி, பட்டணாபட்டி கிராமத்தை சேர்ந்த, விவசாயி சரவணன், 50. இவரது மனைவி ராதா, 45. இவர்களது மகள்கள் காயத்ரி, 26, திலகவதி, 24. இந்த இருவரும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்து வீட்டில் உள்ளனர்.
கடைசி மகள் அம்சவள்ளி, 21, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
இவர் சிறு வயது முதலே வலுதுாக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன், 26ல் அவினாசியில் நடந்த மாநில வலுதுாக்கும் போட்டியில், 83 கிலோ பிரிவில், 415 கிலோ துாக்கி தங்கம் வென்றார்.
ஜூலை, 9ல், ஐதராபாத்தில் நடந்த தேசிய வலு துாக்குதலில், 83 கிலோ பிரிவில், 400 கிலோ துாக்கி வெண்கலம் வென்றார்.
அரசு வேலை வழங்கப்படுமா?
இதுகுறித்து அம்சவள்ளியின் தந்தை சரவணன் கூறியதாவது:
நான், 10ம் வகுப்பு வரை தான் படித்தேன். மனைவி படிக்கவில்லை. 3 பெண் குழந்தைகள் பிறந்தது குறித்து சிறிதும் வருந்தவில்லை.
மிகவும் கஷ்டப்பட்டு, 3 பேரையும் பட்டம் படிக்க வைத்தேன். கடைக்குட்டி, குக்கிராமத்தில் இருந்து சென்று, நியூசிலாந்தில் நடந்த போட்டியில் சாதித்ததோடு, தமிழகம் மட்டுமின்றி இந்தி யாவுக்கே பெருமை சேர்த்தது மட்டற்ற மகிழ்ச்சி.
இந்திய, மாநில அரசுகள், என் மகளுக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.