மதுரை:மதுரையில், பசுவின் வயிற்றில் இருந்த, 65 கிலோ பிளாஸ்டிக், துணிப்பை கழிவுகளை மதுரை அரசு கால்நடை பன்முக மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.
இது குறித்து முதன்மை டாக்டர் வைரவசாமி கூறியதாவது:
வடக்கு மாசி வீதி பரமேஸ்வரன் வளர்க்கும் பசுவை, வெளியூரிலிருந்து வாங்கி வந்த போது, கர்ப்பமாக இருந்ததால் வயிறு பெரிதாக இருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.
சமீபத்தில் கன்று ஈன்றது. அதன் பிறகும் வயிறு பெரிதாக இருந்ததால் எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வயிற்றில் கழிவு மலை இருந்தது கண்டறியப்பட்டது.
கால்நடை இணை இயக்குனர் நடராஜகுமார் அறிவுறுத்தல்படி, டாக்டர்கள் எம்.முத்துராமன், முத்துராம், அறிவழகன், விஜயகுமார் ஆகியோருடன் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தோம்.
ஒன்றோடொன்று சிக்கி பின்னி பிணைந்திருந்த பிளாஸ்டிக், துணிப்பை கழிவுகளை வயிற்றுக்கு சேதமில்லாமல் அகற்றினோம்; அதன் எடை, 65 கிலோ. தற்போது பசு குணமடைந்து தீவனம் உண்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.