ஈச்சங்காடு, பல்லாவரம் - துரைப்பாக்கம் வரை, 10.6 கி.மீட்டரில் ரேடியல் சாலை உள்ளது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், நன்மங்கலம் உள்ளிட்ட இடங்களிலிருந்து, பல்லாவரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், இந்த ரேடியல் சாலையில்தான் பயணிக்கின்றனர்.
மேற்கண்ட இடங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், மேடவாக்கம்- - மடிப்பாக்கம் சாலை வழியாக வந்து, பின் ஈச்சங்காடு சந்திப்பில், இடது புற அணுகு சாலையில் 1,000 அடி துாரம் பயணித்து, பிரதான ரேடியல் சாலையை அடைவர்.
இந்த அணுகு சாலையில் மேற்கொள்ளப்பட்ட, மழை நீர் வடிகால் பணி முடிந்து ஒரு மாதமாகியும், சாலை சீரமைக்கப்படவில்லை.
இதனால், சாலை முழுதும் கந்தல் கோலத்திற்கு மாறிவிட்டது. தமிழக நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் இந்த அணுகு சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக மாறி சகதி சாலையாக இருக்கிறது.
இவ்வழியே செல்ல சிரமப்படும் வாகன ஓட்டிகள், தரமான அணுகுசாலையை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.