தி.மலை:அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மகா தீபம் ஏற்றவுள்ள தீப கொப்பரையை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், வரும் 6ம் தேதி காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்ற உள்ள கொப்பரை, வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க, விசேஷமாக செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.
ஐந்தரை அடி உயர கொப்பரையை, மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக மேல் பாகத்தில், நான்கு வளையம், கீழ்பாகத்தில், நான்கு வளையம் பொருத்தப்பட்டு, வண்ணம் பூசும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வரும் 5ம் தேதி மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.