காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் வரி செலுத்துது போல் மளிகை கடை, டீ கடை, பேக்கரி, பெட்டிக்கடை உட்பட அனைத்தும் நடத்துவதற்கு மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும்.
அதற்கான கட்டணத்தை செலுத்திய பின் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். கடை உரிமத்தை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
அவ்வாறு கடைகள் நடத்துவதற்கு உரிமம் பெறாமல் இருந்தால் அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அபராதம் விதிப்பார்கள். அல்லது உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.
அந்த கடைகளுக்கு சென்று ஏன் லைசென்ஸ் வாங்காமல் கடை நடத்தி வருகிறீர்கள் என கூறி குறிப்பிட்ட தொகை வாங்கி சென்று விடுகின்றனர்.
கடைகளுக்கு உரிமம் அளிக்க காலம் கடத்துவதற்கு இது தான் காரணம் என கடை உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
கடை உரிமம் வழங்காததால் மாநகராட்சிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்கின்றனர்.
இது குறித்து கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
கடை நடத்துவதற்கு உரிமம் பெற இரு ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதற்கான பணம் கொடுங்கள் அடுத்த மாதம் லைசென்ஸ் வந்து விடும் என கூறி சுகாதார ஆய்வாளர் பணத்தை வாங்கி செல்கின்றனர். லைசென்ஸ் வந்தபாடில்லை.
கடிந்து கேட்டால் உரிமம் இல்லாமல் கடையை நடத்த கூடாது. 2,000 ரூபாய் கொடுங்கள் என மிரட்டு வாங்கி செல்கின்றனர்.
கடை உரிமம் கிடைத்தால் வங்கியில் கடன் பெற வசதியாக இருக்கும். அதன் மூலம் கடையை வளர்ச்சி செய்யலாம். அதனால் நாங்களும் பல முறை கேட்டும் இழுத்தடிப்பு வேலை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் கண்ணன் கூறுகையில், ''கடைகளுக்கு உரிமம் வழங்குவது அந்தந்த சுகாதார ஆய்வாளரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.