தூத்துக்குடி:கோவில்பட்டியில் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மாலையில் எழுத்தாளர்கள் பங்கேற்ற விழா நடந்தது.
தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி அருகே இடைச்செவலில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. தனது கோபல்லபுரத்து மக்கள் - எனும் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
அவரது நினைவை போற்றும் வகையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கி.ரா.,வின் முழு உருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதனை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேன், கலெக்டர் செந்தில்ராஜ், கி.ரா., குடும்பத்தினர், எழுத்தாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர் பயன்படுத்திய பொருட்கள் புதுச்சேரியில் இருந்து வரவழைத்து வளாகத்தில்வைக்கப்பட்டுள்ளன. அவரது, கரிசல் எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.