உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, 14வது வார்டு, வாழைத்தோப்பு தெருவில் இயங்கும் அங்கன்வாடி மையம், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தில் 16 குழந்தைகள் பயில்கின்றனர்.
அங்கன்வாடிக்கான கட்டட சுவர் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கூரையின் சீமை ஓடுகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. கட்டடத்தின் உறுதி தன்மையும் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது.
கூரை சிதிலமடைந்துள்ளதால், மழை நேரங்களில் நீர் சொட்டுகிறது. இதனால், மழைக்காலங்களில், குழந்தைகள் உள்ளே அமர முடியாத நிலை உள்ளது.
தற்போது, இக்கட்டடம் மேலும் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் நிலையில் உள்ளது.
இதனால், அங்கன்வாடிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே பழுதான இந்த பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய அங்கன்வாடி கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.