ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்து, வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அமுதா, ஆணையர் தரேஸ் அகமது, மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி பேசினர்.
முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார். பின், பாலின சமத்துவ உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
மகளிர் திட்டம் சார்பில், 15 பயனாளிகளுக்கு, 1.03 கோடி ரூபாயில் கடனுதவி உட்பட பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், மொடக்குறிச்சி சரஸ்வதி, டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.