ஈரோடு : ''மகளிர் குழுக்களுக்கு நடப்பாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த அவர், கலெக்டர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் கூறியதாவது:
கடந்தாண்டு மகளிர் குழுக்களுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
நடப்பாண்டில், 25 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களை கொண்டு, கலைவாணர் அரங்கில் கண்காட்சி நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட, மாநில அளவில் கண்காட்சி நடத்தப்படும்.
நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி நாட்களின் எண்ணிக்கை, கூலி உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிவிப்பை, முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தாததால், நிதி வருவதில் சுணக்கம் ஏற்பட்டது.
தற்போது மத்திய அரசிடம் உள்ளாட்சி நிதி பெற்று பணி நடக்கிறது. 12,525 பஞ்.,களிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.