ஓசூர்: ஓசூர் வீட்டு வசதி பிரிவில், வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு, வட்டி சலுகை வழங்கி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஓசூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்ற தகுதியான ஒதுக்கீட்டுதாரர்கள் நிலுவை தொகை செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் நிலுவை தொகை செலுத்த, தமிழக அரசாணைப்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வட்டி சலுகை அறிவித்துள்ளது.
எனவே, வீடு, மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, மாத தவணைக்கான அபராத வட்டி மற்றும் விடுபட்ட வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும், 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இச்சலுகையை பயன்படுத்தி, ஓசூர் வீட்டு வசதி பிரிவின் மூலம் ஒதுக்கீடு பெற்றவர்கள், வரும், 2023 மே, 3க்குள், தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு ஏற்ப, நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
இச்சலுகை எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படாது. நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரைய பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள், கிரைய பத்திரம் பெற்று கொள்ள ஏதுவாக இந்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.இது, சுயநிதி திட்டம் மற்றும் தற்காலிக விலை திட்டங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.