கிருஷ்ணகிரி: இணையதள விளம்பரத்தை நம்பி, 39 லட்சம் ரூபாயை இன்ஜினியர் இழந்தார். அவரிடம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, கொரனுரை சேர்ந்தவர் மஞ்சுநாத், 33; இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கம்பெனியில், வடிவமைப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வீணா என்ற பெயரில் விளம்பரம் வந்துள்ளது. அதில், ஒரு இணையதள முகவரியின் கீழ் சுற்றுலா தலங்களை காண்பித்து அதற்கு யார் அதிகமாக மதிப்பெண் கொடுக்கின்றனரோ அவர்களுக்கு பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மஞ்சுநாத் அந்த இணையதள லிங்கில், தன் அலைபேசி எண், சுயவிபரங்களுடன் அவர்களின் விளம்பரத்திற்கு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து அவரது வங்கி கணக்கில், 800 ரூபாயை அவர்கள் அனுப்பியுள்ளனர். அதன்பின், மஞ்சுநாத்தை தொடர்பு கொண்ட அந்த இணையதள நபர்கள், 'நீங்கள் எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி, விளம்பரத்திற்கு மதிப்பெண் கொடுத்தால், முதலீடு செய்த பணத்துடன் அதிகமான தொகை உங்களுக்கு கிடைக்கும்' என கூறியுள்ளனர்.
இதை நம்பி முதலில், 20 ஆயிரம் ரூபாய் வரை போட்டுள்ளார். அதற்கு, 27 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. மீண்டும், 27 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, 32 ஆயிரம் ரூபாயாக திரும்ப கிடைத்துள்ளது. இதில், முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என நம்பிய மஞ்சுநாத், அவர்கள் கூறிய நான்கு வங்கி கணக்குகளில், 39 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தார். அதன்பின் அவர்களது இணையதள பக்கம் முடங்கியது.
அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திலிருந்து வெளியேறினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சுநாத், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில், நேற்று முன்தினம் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.