சென்னை, கொடுங்கையூரில் 34 வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், விதவிதமான பட்டாக்கத்திகளுடன் காரில் திரிந்த இரு ரவுடிகளை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர்., நகரில் நேற்று அதிகாலை, வாகன சோதனையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த காரை மறித்தபோது, போலீசாரிடம் சிக்காமல் இருக்க, இருவர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில் ஒரு கட்டடத்தின் மேலே ஏறும்போது, இருவரும் தவறி விழுந்ததில், கால்களில் முறிவு ஏற்பட்டது. அவர்களை, கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர்.
காரை சோதனையிட்டபோது, ஒரு துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக்கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் 4 கிலோ சிக்கி முக்கி கற்கள் உள்ளிட்டவை சிக்கின.
மேற்கண்ட பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார், பிடிபட்ட இருவரிடம் விசாரணை செய்தனர்.
இதில், வியாசர்பாடி, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவுடி 'வெள்ளை' பிரகாஷ், 31, செங்குன்றம் வடகரையைச் சேர்ந்த விக்கிரமாதித்தன், 36, என்பது தெரிந்தது.
விழுப்புரம், செஞ்சி தாலுகாவை பூர்வீகமாக உடைய பிரகாஷ் மீது, கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வழக்குகள் உட்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தவிர, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.
அதேபோல், விக்கிரமாதித்தன் மீது, மாதவரம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. முக்கிய குற்றவாளிகளை குறிக்கும், 'ஏ' பிரிவில் உள்ள இருவரையும், போலீசார் பல நாட்களாக தேடி வந்தனர். அவர்களிடம் சிக்காமல், பல குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பிடிபட்ட இருவருக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கவும், எதிரிகள் மீது தாக்குதல் நடத்தவும், வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
பல வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த இருவரையும் பிடித்துள்ளோம். யாரை கொல்வதற்காக வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் இருவரும் சென்றனர் என தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆயுதங்களுடன் காரில் திரிந்த இரு ரவுடிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.