ஓசூர்:உரிகம் அருகே, சண்டையில் உயிரிழந்த யானையை உடற்கூராய்வு செய்த வனத்துறையினர், மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் வனக்கோட்டம், காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்துக்குட்பட்ட உரிகம் வனச்சரக பகுதியில், உன்சேபச்சிகொல்லை வனப்பகுதியில், வனச்சரகர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில்,38 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது. தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, யானை சடலத்தை வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவ குழுவினர், அத்திநத்தம் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முனியப்பன், கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி தொண்டு நிறுவன உறுப்பினர் வினய் முன்னிலையில், நேற்று முன்தினம் உடற்கூராய்வு செய்தனர்.
அப்போது, யானை முதுகு பகுதியில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் தென்பட்டன.
இதனால், யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், பெண் யானை படுகாயமடைந்து உயிர் இழந்திருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
பின், உடற்கூராய்வு செய்யப்பட்ட யானையின் உடலை, மற்ற விலங்குகளுக்கு உணவாக அப்படியே விட்டு சென்றனர்.