மாமல்லபுரம்:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தடத்துடன், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும், வல்லிபுரம் பாலாற்று பழைய பாலத்திற்கு மாற்றாக, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்காலிக கான்கிரீட் பாலம் தீர்வாகாது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை முக்கிய தடங்களாக உள்ளன. மாவட்ட கடலோர முக்கிய பகுதிகள், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார் பகுதிகளில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடலோர சுற்றுலா இடம் மாமல்லபுரம், ஆன்மிக இடங்கள் திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளை, மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையுடன், திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் தடம் இணைப்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம் சுற்றுலாவிற்காக, பிற மாவட்ட பயணியர், இத்தடம் வழியே வருகின்றனர். திருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் பகுதியினர், வெளியிடம் சென்று திரும்புகின்றனர். தற்கால சூழலில் போக்குவரத்து அதிகரிக்கிறது.
இத்தடத்தில், வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றில் உள்ள பாலம், வாகன போக்குவரத்திற்கு இன்றியமையாதது. இப்பாலம் பலவீனமடைந்து, இன்றைய போக்குவரத்திற்கேற்ப இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன், குறுகிய ஒருவழிப் பாதையாக இருந்தது. பிற பகுதிகளில் இருந்து, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரவும், இப்பகுதிகளில் இருந்து, பிற பகுதிகளுக்கு செல்லவும், நீண்டகாலமாக செங்கல்பட்டு வழியே, 15 கி.மீ., சுற்றிச் சென்றனர்.
உதாரணமாக, மாமல்லபுரத்தில் இருந்து, தென்மாவட்ட பகுதி செல்ல, வல்லிபுரம் வழியே, மதுராந்தகம், கக்கிலபேட்டை பகுதியை, 38 கி.மீ., தொலைவில் அடையலாம்.
இத்தடத்தில், திருக்கழுக்குன்றம் - கக்கிலபேட்டை 21 கி.மீ., குறுகிய சாலை சீரழிவால், வாகனங்கள், செங்கல்பட்டு வழியே, கூடுதலாக, 12 கி.மீ., சுற்றிச் சென்றன.
தற்கால போக்குவரத்து அவசியம் கருதி, திருக்கழுக்குன்றம் - கக்கிலபேட்டை சாலையை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பரிசீலித்த தமிழக அரசு, திருப்போரூரில் இருந்து, திருக்கழுக்குன்றம் வழியே, கக்கிலபேட்டை வரை, 42 கி.மீ., தொலைவு சாலையை, 10.5 மீ., அகல சாலையாக, 2019ல் மேம்படுத்தியது.
இத்தடத்தில், திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றுப் பாலம் இன்றியமையாதது. 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைப்பாலம், ஆற்று வெள்ளப்பெருக்கில் மூழ்குகிறது. வெள்ளம் வடியும் வரை, போக்குவரத்து முடங்குகிறது.
சாலையை மேம்படுத்தியும், குறுகிய தரைப்பாலத்திற்கு மாற்றாக, புதிய உயர்மட்ட பாலம் அமைக்கவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தரைப்பாலம் மூழ்கி, 100 மீ., நீளத்திற்கு துண்டித்து, வெள்ளத்தில் அடித்துச் சென்றது.
ஒரு மாதம் போக்குவரத்து முடங்கி, வெள்ளம் வடிந்த பிறகே, துண்டிப்பு பகுதியில், கான்கிரீட் குழாய்கள் வைத்து இணைத்து, தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
சாலை மேம்பாட்டைத் தொடர்ந்து, சுற்றுலா, மாவட்ட பகுதி, போக்குவரத்து என அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், வருங்கால அவசியத்திற்கேற்ப, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.