சென்னை, :செங்கல்பட்டு மாவட்ட ரோலர் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில், ஐந்தாவது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில், நேற்று முன்தினம் துவங்கியது.
'ரோலர் ஸ்கேட்டிங்' கூடைப்பந்து என்பது, கால்களில் சக்கரம் கட்டி, கூடைப்பந்து விளையாடும் போட்டி.
இப்போட்டியில், தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து, மொத்தம் 13 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோர் என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் நாள் போட்டியை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் தமிழக சிறுவர், சிறுமியர், தங்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். இன்று இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.