சென்னை, ''மேற்கத்திய இசையைவிட, நம் நாட்டின் இசை மிகவும் மேம்பட்டது. நம் கலாசாரத்துடன் கலந்தது,'' என, கவர்னர் ரவி கூறினார்.
பாரம்பரிய இசையை வளர்க்க, 'ஏகத்வம் என்ட்ரஸ்ட்' அறக்கட்டளை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த, 2019ம் ஆண்டு முதல், புகழ்பெற்ற இசை கலைஞர்கள், ஆர்வலர்கள், விமர்சகர்களை ஒருங்கிணைத்து, 'ஏகத்வம் ஹோலி' இசை விழா நடத்துகிறது.
இந்த வகையில், சங்கீத காலாநிதி டி.என்.கிருஷ்ணனின், 94வது பிறந்தநாளை சிறப்பித்து, அவர் நினைவாக விருது வழங்கியது. இந்த விழா நேற்று, அடையாறு, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது.
கடந்த 2021ம் ஆண்டுக்கான, சங்கீத கலாநிதி டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதை 'பத்மபூஷன்' விருது பெற்ற என்.ராஜம் பெற்றார்.
'பத்மஸ்ரீ' விருது பெற்ற மிருதங்க வித்வான் ஸ்ரீ.டி.கே.மூர்த்திக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிக்கில் குருசரணுக்கு, சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 2022ம் ஆண்டுக்கான, சங்கீத கலாநிதி டி.என்.கிருஷ்ணன் நினைவு விருதை, வயலின் வித்வான் எம்.சந்திரசேகரன் பெற்றார். குமாரி அம்ருதா முரளி, சிறப்பு விருது பெற்றார்.
தமிழக கவர்னர் ரவி, விருதுகள் வழங்கி பேசியதாவது:
டி.என்.கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அவரை போற்றி, அவர் பெயரில் விருது வழங்கும், ஏகத்வம் என்ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு வாழ்த்துகள்.
டி.என்.கிருஷ்ணன், இசையோடு பிறந்துள்ளார். இவரது இசை, மூத்தவர்களுக்கு அருமருந்தாக கிடைத்துள்ளது.
வளரும் கலைஞர்களுக்கு, இசை குறித்த ஞானத்தை கற்றுக்கொள்ளும் ஊக்குவிப்பாக டி.என்.கிருஷ்ணன் இசை இருந்துள்ளது.
இவரது இசை, மனதுக்கு இதமானது. இசை ஒரு வகை மொழி. புனிதத்துவம் உடையது.
இசை வேதத்தில் இருந்து உருவானது. நம் கலாசாரத்துடன் ஒன்றியது. மேற்கத்திய இசையைவிட, நம் நாட்டின் இசை மிகவும் மேம்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, விஜிகிருஷ்ணன், ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோரின் வயலின், திருவாரூர் பக்தவத்சலத்தின் மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஷ்ணனின் கடம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், கேரளா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமகிருஷ்ணன், 'மியூசிக் அகாடமி' தலைவர் தலைவர் முரளி, சங்கீத வித்வான் ஆலப்பி வெங்கடேசன், பாரதிய வித்யா பவன் இயக்குனர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.