நாகப்பட்டினம்:நாகை அருகே, கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி, குடும்பம் நடத்த வர மறுத்ததால், 4 வயது பெண் குழந்தையை கொலை செய்து, தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம், சீயாத்தமங்கை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 35. பெயின்டரான இவர், மனைவியை இழந்துஇருந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் தீபா, 28. கணவரை இவர் இழந்த நிலையில், 8 வயதில் மகன் உள்ளார்.
இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 4 வயதில் பெண் குழந்தை இருந்தது.
மாரிமுத்து குடிபோதையில் தினந்தோறும் தகராறு செய்ததால், தீபா கோபித்துக் கொண்டு, நன்னிலத்தில் உள்ள தாய் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன் சென்றார்.
இருதரப்பு உறவினர்களும் சமாதானம் பேசியும், தீபா கணவன் வீட்டிற்கு வர மறுத்து விட்டார்.
கடந்த 30ம் தேதி, தீபா வீட்டிற்கு சென்ற மாரிமுத்து, மனைவியிடம் தகராறு செய்து, 4 வயது பெண் குழந்தையை தன்னுடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், தொலைபேசியில் தீபாவை தொடர்பு கொண்டு உடனே வரும்படி கூறி உள்ளார்.
எனினும் அவர் வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மாரிமுத்துவை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த தீபா, உறவினர்கள் சிலருடன்மாரிமுத்து வீட்டிற்கு வந்தார்.
வீட்டிற்குள் மாரிமுத்து துாக்கில் சடலமாக தொங்கிய நிலையில், குழந்தை இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த தீபா, திட்டச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
குடும்பம் நடத்த மனைவி வராததால், குழந்தையை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.