மயிலாடுதுறை:சீர்காழி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பலத்த காற்று மற்றும் அலை சீற்றம் காரணமாக விசைப்படகு சேதமடைந்து மூழ்கியது. தத்தளித்த நான்கு மீனவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வானகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 47; மீனவர்.
இவருக்கு சொந்தமான விசைப்படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு, மாணிக்கம் ஆகியோர் நேற்று அதிகாலை தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திற்கு கிழக்கே 2 கி.மீ., மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக நிலை தடுமாறிய விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.
படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.
கடற்கரையில் இருந்தவர்கள் இதைப் பார்த்து, கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
வானகிரி கிராம மீனவர்கள் வேறு படகில் கடலுக்குள் சென்று மூழ்கிய படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
கடலில் மூழ்கி சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.