நாகப்பட்டினம்:தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை, கலெக்டர் அருண் தம்புராஜ், தன் இருக்கையில் அமர வைத்து பாராட்டினார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10ம் வகுப்பு முடித்த மாணவ - மாணவியருக்கு தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்றது.
மாநிலத்தில் 2.50 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். தேர்வு முடிவு இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இதில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அபிநயா என்ற மாணவி, 100க்கு 97 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த 150 முதுகலைஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் கூட்டம், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அப்போது கலெக்டரை சந்திப்பதற்காக மாணவி அபிநயாவை, பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தனர். இதை அறிந்த கலெக்டர், மாணவியை மேடைக்கு வரவழைத்தார்; பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து பாராட்டினார்.
அதோடு, கூட்டத்தில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் மாணவியை அமர வைத்து, அருகிலேயே கலெக்டரும் அமர்ந்து முதலிடம் பிடிக்க காரணமானவர்கள் குறித்து மைக்கில் பேசுமாறு கூறினார்.
மாணவி அபிநயா தன்னை தயார்படுத்திய ஆசிரியர்களின் பெயர்களை கூறினார். மாணவிக்கு அறிவுரைகளை வழங்கி, கலெக்டர் அருண்தம்புராஜ் ஊக்கப்படுத்தினார்.