திருவண்ணாமலை:''தீப திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி, 300 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது,'' என, அமைச்சர் வேலு கூறினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தீப திருவிழா ஏற்பாடு பணிகள் குறித்து மூன்றாவது கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.
பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, மாவட்ட கலெக்டர் முருகேஷ், எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின் அமைச்சர் வேலு, நிருபர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலையில், 13 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 52 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறியும் வகையில், போலீசார் சார்பில், 'உங்களுக்கு உதவலாமா' என்ற, 85 பூத் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றி, 300 மீட்டருக்கு பைக், கார் உள்ளிட்ட எவ்வித வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. நகரின் முக்கிய பகுதிகளில், 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களாக டி.ஜி.பி., சைலேந்திரபாபு கோவிலில் ஆய்வு செய்து, போலீசாரின் பாதுகாப்பு பணி குறித்து அறிவுறுத்தி உள்ளார்.
பாதுகாப்பு பணியில், 13 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.