கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை தொடர்ந்து கடத்தி விற்பனை செய்த ஜாகீர் உசேன் 52, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பெரியபட்டினத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் கடல் அட்டை, கடல் வெள்ளரி உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வந்தார். இவர் மீது இது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் பாகன் ஜெகதீஷ் சுதாகர், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுப்படி நேற்று ஜாகீர் உசேன் , குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது கடல் அட்டை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.