அருப்புக்கோட்டை : பகிர்மான குழாய்களில் உடைப்பு, அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் தாமிரபரணி குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு மூலம் வைகை குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து போனதால் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனது. பின்னர், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது.
தாமரபரணி ஆற்றுப்பகுதியில் வல்ல நாடு என்ற இடத்திலிருந்து 167 கிலோ மீட்டர் தூரம் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வருகிறது.
இவற்றிற்கு இடையே 5 நீரேற்று நிலையங்கள் உள்ளன. தினமும், அருப்புக்கோட்டைக்கு 55 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் திட்ட பணிகள் பராமரிப்பு செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் தடைபடாமல் இருக்க மின்மோட்டார் களை இயக்க தனியாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.
இருப்பினும் அருப்புக்கோட்டை நிர்ணயிக்கப்பட்ட அளவு தற்போது வரை முழுமையாக வழங்கப்படவில்லை.. தினமும், 20 லட்சம், 30 லட்சம் லிட்டர் என்ற அளவில் தான் தண்ணீர் வருகிறது.
தாமிரபரணி திட்டத்திலிருந்து 55 லட்சம் லிட்டர் தண்ணீர், வைகை ஆற்றில் இருந்து 20 லட்சம் லிட்டர் என, 1 நாளைக்கு 75 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்தால் தான் நகரின் குடிநீர் தேவையை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும்.
தாமிரபரணி திட்டத்திலிருந்து முழுமையாக குடிநீர் வராததற்கு காரணம் பகிர்மான குழாயில் ஆங்காங்கு நீர் கசிவு ஏற்படுகிறது. இவை சரி செய்யப்படாமல் மாத கணக்கில் உள்ளது. இதனாலேயே பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
மேலும் தடையில்லா மின்சாரம் பெற தனி இணைப்பு இருந்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதனால் குழாய்களில் தண்ணீர் வேகமாக செல்கிற போது, மின் தடை காரணமாக, நின்று விடுவதால், குழாய்கள் பாதிப்பு ஏற்பட்டு உடைகிறது..
ஒரு முறை மின் தடை ஏற்பட்டால் 1 நாள் குடிநீர் விநியோகம் பாதிக்கிறது. நகரில் சுழற்சி முறையில் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 2,3 நாட்கள் வரை தள்ளி போகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நீரேற்று நிலையங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு இருக்காது. தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வசதியாக இருக்கும். போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்தி பகிரமான குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்தால் லட்சக்கணக்கில் வீணாகும் குடிநீர் சேமிக்கப்படும். இதன் மூலம் நகருக்கு கூடுதலாக தண்ணீர் வினியோகம் செய்யலாம். பராமரிப்பு பணியில் அரசு மெத்தனம் காட்டுவதால் புதிய புதிய குடிநீர் திட்டங்களை கொண்டு வந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து கொண்டே தான் உள்ளது.
அருப்புக்கோட்டைக்கு வைகை தாமிரபரணி 1 ஆகியவற்றின் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. கூடுதலாக தாமிரபரணி திட்டம் 2 பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் 1 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என கூறுகின்றனர்.
எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் நகரில் முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.