பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் நள்ளிரவில் அதிகாரிகளின் ஆசியுடன் மெகா மணல் கொள்ளை நடந்துள்ளதாக மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர்பிரபாகரன் குற்றம் சாட்டினார். இதனால் உருவான பள்ளம் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது.
பரமக்குடியில் சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சித்திரை திருவிழாவை காண லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் அள்ளும் இயந்திரம் மூலம் லாரிகளில் மெகா மணல் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
மூன்று மாதங்களாக இடைவிடாமல் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இருந்தும் 5 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளதால் பள்ளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்து நிரம்பியுள்ளது. இதனால் அங்கு செல்வோர் தவறி விழுந்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி எல்லை வரை வைகை ஆறு நீள்கிறது. ஆனால் பரமக்குடியில் மட்டுமே ஓரளவு ஆற்று மணல் கண்ணில் படுகிறது. இந்நிலையில் நயினார்கோவில் கங்கைகொண்டான், போகலூர் பொட்டி தட்டி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மணல் கொள்ளை தொடர்கிறது.
நடவடிக்கை வேண்டும்: மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் கூறுகையில், ''மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தி பகிரங்கமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்உள்ளனர். மணல் அள்ளிய வாகனங்கள் சென்ற தடம் பெருமாள் கோயில் வைகை ஆற்று படித்துறையில் இருந்து சர்வீஸ் ரோட்டில் பதிந்துள்ளது.
எனவே மணல் மாபியாக்களிடம் இருந்து வைகை ஆற்றை காப்பாற்ற வேண்டும். அதிகாரிகள்துணையுடன் இக்கொள்ளை நடப்பதாக தெரிகிறது. சர்வீஸ் ரோட்டில் உள்ள சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.