முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழத்துவல், கே.ஆர்.பட்டணம் உட்பட 4 கிராமங்களுக்கு செல்லும் வரத்து கால்வாயை அரசை எதிர்பார்க்காமல் கிராம மக்களே பணம் வசூலித்து துார்வாரினர்.
கீழத்துாவல், மேலத்துாவல், கே.ஆர்.பட்டணம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழில்.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் பரளையாறு வரத்து கால்வாய் வழியாக இந்த கிராமங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வந்தது.
அதன் பின் வரத்து கால்வாய் முறையாக துார்வாரப்படாததால் மணல் மேடாகியும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியது. கால்வாயை துார்வார கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கீழத்துாவல், மேலத்துாவல், கே.ஆர்.பட்டணம், கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் தங்களால் இயன்ற பணம் வசூல் செய்து கால்வாயை துார்வாரினர்.
கிராம மக்கள் கூறுகையில், துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அரசை நம்பாமல் கிராம மக்கள் சேர்ந்து ரூ,4 லட்சம் வசூலித்து இயந்திரங்கள் மூலம் 7 கி.மீ., வரத்து கால்வாய் துார்வாரப்பட்டுஉள்ளது. இனி வரும் நாட்களில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.