புதுச்சேரி,-அரியாங்குப்பத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணிகளையொட்டி, நான்கு நாட்களுக்கு தினசரி 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரியாங்குப்பம், ஆர்.கே., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனையொட்டி வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் பகல் 12.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அரியாங்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
இது போல், அரியாங்குப்பம் இ.சி.ஆர்., மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் பகல் 12.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குடிநீர் விநியோகம் தடைப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.