கோவை:ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய வாலிபர், ஏழரை லட்சம் ரூபாயை மோசடி பேர் வழிகளிடம் இழந்தது குறித்து, கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை வெள்ளலுார் ஆருத்ரா நகரை சேர்ந்தவர் அன்பழகன், 24; பட்டதாரியான இவர், பேஸ்புக்கில் ஆன்லைன் வேலை தொடர்பாக வெளியான விளம்பரத்தில் இருந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றார்.
அந்த லிங்க், அவரை டெலிகிராம் செயலிக்கு அழைத்து சென்றது. 'நாங்கள் குறிப்பிடும் எளிமையான 'டாஸ்க்'குகளை செய்ய வேண்டும்' என்றும், ஒவ்வொரு டாஸ்க்கும் செய்து முடிக்கும்போது 50 ரூபாய் கிடைக்கும்; 'யுடியூப்' வாயிலாக விளம்பரங்களை பார்த்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்த தொடர்பு எண்ணுக்கு போன் செய்த போது, லுாதர் சிங் என்பவர் பேசினார். 'டாஸ்க் முடிந்தவுடன் பணம் உங்கள் வங்கிக்கணக்குக்கு வந்து விடும். 100 சதவீதம் வெளிப்படையானது' என்று உறுதி கூறினார்.
அதன்படி, அவர் குறிப்பிட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அன்பழகனுக்கு, 350 ரூபாய் பணம் கிடைத்தது. இதனால் அவருக்கு டாஸ்க் மீதும், அதை அளித்த லுாதர் சிங் மீதும் அபார நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த கட்டமாக, பணம் முதலீடு செய்வது தொடர்பான ஒரு டாஸ்க் அவருக்கு தரப்பட்டது.
அவர், தன்னிடம் இருந்த 7.58 லட்ச ரூபாயை ஒரு இணைப்பிற்கு சென்று டிபாசிட் செய்தார். அத்துடன் அவரது 'டாஸ்க்' முடிந்தது; டிபாசிட் செய்த பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முயற்சித்தபோது முடியவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., கருப்புசாமி வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் அருண், மோசடிப் பேர்வழியை தேடி வருகிறார்.