விழுப்புரம்,-விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொன்மைச் சின்னங்களை் பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான முன் அனுமதி வழங்கி, கலெக்டர் மோகன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் ராமன் விழுப்புரத்தில் இடத்தை நேரில் பார்வையிட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
கடந்த மார்ச் மாதம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விழுப்புரம் பொதுப்பணித் துறையினரும், திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை ஏற்ற தமிழக அரசு, அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி வழங்கி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், விழுப்புரத்தில் 2000 சதுர மீட்டர் (50 சென்ட்) நிலத்தில், புதிய கட்டடம் கட்டி, அதில் காட்சிக் கூடம் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இதனை வரவேற்றுள்ள விழுப்புரம் அருங்காட்சியக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர், விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.