திருப்பூர்:திருப்பூரில் பெண்ணை வர்ணித்து, மொபைல் போன் எண்ணை கேட்ட, தனியார் கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், ராயபுரத்தை சேர்ந்த, 29 வயது பெண்; அழகு கலை பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பு செல்ல தனியார் கால்டாக்சி அலுவலகத்துக்கு அழைத்து கார் பதிவு செய்தார். வீட்டுக்கு வந்த காரில் கிளம்பி வித்யாலயம் நோக்கி சென்றார்.
பயணத்தின் இடையே, கார் டிரைவர் ரஞ்சித்குமார், அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்து, அழகாக இருப்பதாகவும், இதே போல் உடையே அணியுங்கள் என்றும் கூறி ஆபாசமாக பேசினார்.
தொடர்ந்து, மொபைல் போன் எண்ணையும் கேட்டுள்ளார். பின் காரை விட்டு இறங்கிய அப்பெண், கணவருக்கு தெரியப்படுத்தினார். புகாரின் பேரில், கார் டிரைவர் ரஞ்சித்குமாரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.