அவிநாசி:அவிநாசி பேரூராட்சி காந்திபுரத்தில், பொது குழாய் அமைக்கும் பணியில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அவிநாசி பேரூராட்சி சார்பில், வார்டு தோறும், பொது குடிநீர் குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி, காந்திபுரம் பகுதியில், சங்கமாங்குளம் வீதி, சுகாதார பணியாளர் வீதி, முனியப்பன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில், புதிதாக பொது குழாய் பொருத்தப்பட்டு, பேரூராட்சியின் 'போர்வெல்' தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
வார்டு மக்கள் சிலர் கூறியதாவது:
வாணியர் வீதி உள்ளிட்ட இடங்களில், குடியிருப்புவாசிகளால் ஏற்கனவே நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உள்ள குழாய்களுக்கு 10 அடிக்கும் குறைவான தொலைவில், புதிதாக குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் வீட்டுக்கு ஒரு குழாய் போன்று, அருகருகே குழாய் பொருத்தப்பட்டுள்ளன. தினமும், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை 'போர்வெல்' தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, நல்ல தண்ணீரே 3 முதல், 5 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படும் நிலையில், 'போர்வெல்' தண்ணீர் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது. அதே நேரம், இதே வார்டில், மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் பொது குழாய் பொருத்தப்படவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.