சேலம்:சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, மேச்சேரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சாத்தப்பாடியில், மேச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில், 57 மூட்டைகளில் 'ஹான்ஸ், குட்கா' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
அதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய். வாகனத்தை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ், 24, என தெரிந்தது. பெங்களூருவில் வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்க எடுத்து செல்வதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.