கோவை:சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, உலக சாதனை முயற்சியாக, கோவையில் வரும் ஜனவரியில் சர்வதேச சிறுதானிய மாநாடு நடக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
சிறுதானிய உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளதால், 2023ம் ஆண்டை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், டான் மில்லட் அமைப்பு, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
'டான் மில்லட்' நிறுவனர் சுந்தர் கூறியதாவது:
சிறுதானிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறுதானிய தொழில்முனைவோர் சமூகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கோவை நிர்மலா பெண்கள் கல்லுாரியுடன் இணைந்து, ஜன., 7, 8 தேதிகளில், தமிழக சிறுதானிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முக்கிய நிகழ்வாக, உலக சாதனை நிகழ்வாக, 555 மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்த உள்ளோம். இதில், மாநிலம் முழுவதும் சிறுதானியங்களில் உள்ள சிறு, குறு பெண் தொழில் முனைவோரின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இத்துடன் சிறுதானிய கண்காட்சி, சிறுதானிய சர்வதேச மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் வல்லுனர்கள், சிறுதானிய உற்பத்தி தொடர்பான, அனைத்து சவால்களுக்கும் தீர்வு வழங்க உள்ளனர். சிறுதானிய சமையல் போட்டிகள், பாரம்பரிய நடனம், பறை இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.