கோவை:'கோவை விமான நிலையத்தை தனியார் மயமாக்க வேண்டும்' என, கோவை தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:
கோவை விமான நிலையத்தில், பிரத்யேக சர்வதேச புறப்பாடு முனையம், ஆபரணக்கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான மதிப்பீட்டாளர், ஓடுபாதை விரிவாக்கப்பணி, துபாய்க்கு 'ஏர் இந்தியா' விமானம் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, விமானப் போக்குவரத்து துறை செயலரிடம், கடந்த 29ல் மனு அளித்தோம்.
இதையடுத்து, வரும் 6ம் தேதி, கோவை விமான நிலையம் தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டத்தை, டில்லியில் ஏற்பாடு செய்துள்ளார்.
அதில், கோவை தொழில்வர்த்தக சபை சார்பில், தலைவர் ஸ்ரீராமுலு பங்கேற்கவுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கோவையை விட பின்தங்கியிருந்த பெங்களூரூ, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்கள் தற்போது வெகுவாக முன்னேறி விட்டன.
சர்வதேச விமானங்களை இயக்க, விமான நிறுவனங்கள் தயாராகவே உள்ளன. சில நிறுவனங்கள், இங்கு 'லவுஞ்ச்' உட்பட வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி மறுக்கின்றன. கோவை விமான நிலையத்தை தனியார் வசம் அளித்தால் மட்டுமே, இப்பணிகள் அனைத்தும் மிக விரைவாக நடைபெறும். இதை, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, கையகப்படுத்திய வரை, தமிழக அரசு உடனே ஒப்படைக்க வேண்டும் என, முதல்வரின் செயலர் உமாநாத்தை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.